புதன், 6 நவம்பர், 2013

பாரதியின் இந்தியா – புனைவின் வழி வெளிப்பாடு - முனைவர் தி. அன்புச்செல்வன்

     மகாகவி பாரதியாரைத் தமிழின் பல்வேறு கலைவடிவங்களுக்கு முன்னோடி என்று கூறமுடியும். இதற்கு அடிப்படையான காரணம், பாரதி தான் வாழும் காலத்தில் தன்னை எப்பொழுதும் நவீனத்துடன் ஐக்கியப் படுத்திக் கொண்டதே ஆகும். மேலை இலக்கியத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய புதுக்கவிதை வடிவத்தையும் உரைநடை வடிவத்தையும் தமிழில் காலூன்றச் செய்ததில் பாரதியின் பங்கு இன்றியமையாதது. அதேபோல் ஒரு பத்திரிகை ஆசிரியராகவும் அவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தக்கது.

                இக்கட்டுரை, பாரதி புதுவையிலிருந்த போது நடத்தியஇந்தியாஇதழில் 1906 - ஆம் ஆண்டு செப்டம்பர் 8- ஆம் நாள் முதல் 1908 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் வரையிலும் - சுமார் இரண்டாண்டுகள் - வெளியான கருத்துப்படங்களை மட்டும் ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளது.
               
                பாரதியின் கருத்துப்படங்களைத் தொகுத்து வெளியிட்டவர் . இரா. வெங்கடாசலபதி ஆவார். இவரின் பதிப்பு 1906 செப்.8 ஆம் நாள் முதல் 1910 மார்ச் 12 ஆம் நாள் வரையிலான இந்தியா இதழின் 87 கருத்துப்படங்களையும் அவற்றிற்குப் பாரதி எழுதிய சித்திர விளக்கத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படங்களும் அதில் விளக்கப்பட்டுள்ள இந்திய அரசியலும் இன்னும் பரவலாக ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. ஒரு சிலரே இது குறித்து நூல்கள் வெளியிட்டுள்ளனர்1. இவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பாரதியின் அரசியல் நிலைப்பாட்டைத் துல்லியமாக அறியமுடியும்.

                பாரதியின் படங்களினின்று பற்பல செய்திகளை வெளிக்கொணர இயலுமெனினும் இக்கட்டுரை அவரின் அரசியல் நிலைப்பாட்டையும் படங்களில் கையாண்டுள்ள சில பொருள் புலப்பாட்டு உத்திமுறைகளை விளக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

1. அரசியல் நிலை
               
                இந்தியாவின் அன்றைய அரசியல் சூழலே பாரதி என்ற கவிஞனை 'மகாகவி பாரதி" யாக அடையாளப்படுத்தியது. எனவே பாரதியை அரசியல் சார்ந்து அணுகுவது அவசியமாகிறது. மேலும் அவரின் அரசியல் நிலைப்பாட்டைப் பறைசாற்ற எழுந்த இந்தியா இதழின் கருத்துப்படங்களில் அரசியல் குறித்துக் காண்பது இக்காலகட்டத் தேவை. இவரின் படங்களில் அரசியல் நிலைப்பாட்டை நான்கு தன்மைகளாகப் பகுத்துக்காணமுடிகிறது. அவை,
               
                ) ஆங்கிலேயர் எதிர்ப்புப் படங்கள்
                ) மிதவாதிகள் எதிர்ப்புப் படங்கள்
                ) உலக அரசியல் நிகழ்வுப் படங்கள்
                பிற அரசியல் நிகழ்வுப் படங்கள்
என்பன.

                ) ஆங்கிலேயர் எதிர்ப்புப் படங்கள்
                               
இவரது ஆங்கிலேய எதிர்ப்புப் படங்கள், இந்தியச் செல்வத்தை ஆங்கிலேயர் கொள்ளை கொள்ளுதல், ஆங்கிலேயரின் அடக்குமுறை மற்றும் கொடுஞ் சட்டங்கள் இயற்றுதல் போன்ற பொருண்மையை மையமிட்டு அமைகின்றன. இவர் செப்.29 1906 - ல் வெளியிட்ட பசு சித்திரம்; மிகவும் புகழ் வாய்ந்தது. இந்திய மாதா என்ற பசுவிடம் மார்லி குடம் குடமாகப் பால் கறந்து இங்கிலாந்திற்குக் கொடுத்தனுப்புவதாகவும் அதன் கன்றுகளாகிய இந்திய மக்கள் பஞ்சத்தால் இறந்து கிடப்பதாகவும் மெலிந்து நிற்பதாகவும் படம் அமைகின்றது. இதில் பசு - இந்தியா, பால் - செல்வம், கன்று - இந்திய மக்கள், கறப்பவன் - மார்லி, பால் செல்லுமிடம் - இங்கிலாந்து என்பதாக விளக்கப்பட்டுள்ளது.

                இதேபோன்று ஆங்கிலேயரின் கொடுங்கோல் ஆட்சியை விளக்குவதாக அமைந்த படமும் குறிப்பிடத்தக்கது. இப்படம் அக். 31. 1908 -இதழில் வெளியானது. இப்படத்தில் இந்தியாவில் பணிபுரியும் ஆங்கிலேய துரை இந்தியர்களை ஆங்கில அரசுக்கு ராஜ பக்தி மிக உடையவர்களாகக் காட்ட முயல்கிறார். ஆனால் இந்தியர்களின் நிலை பசிப்பட்டினியாலும் நோயினாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்குப் பாரதி எழுதிய சித்திர விளக்கம் மிகவும் சுவையானது.

'பிரிடிஷ் இராஜாங்கத்தினால் பாரத தேசமானது நாளுக்கு நாள் தரித்திரமடைந்து, சுதந்திரங்களையிழந்து பஞ்சத்தாலும் கொள்ளை நோய்களாலும் பீடிக்கப்பட்டு ஜனங்கள் அதிர்ப்தி கொண்டிருக்க, ஆங்கிலோ-இந்திய உத்தியோகஸ்தன் ஜனங்கள் மிகவும் திருப்தியடைந்திருக்கிறதாகவும், தேசம் மிகவும் செல்வமடைந்திருக்கிறதாகவும், பிரிடிஷ் ராஜ்யத்தி;ல் அளவிறந்த நன்மைகள் தங்களுக்குண்டாய் விட்டதால் ஜனங்கள் ராஜபக்தி வெறி கொண்டிருக்கிறார்கள் என்றும் காண்பிக்கப் பார்க்கிறான்.

ஜனங்களுடைய குறைகளும், துன்பங்களும், அதிர்ப்தியும் யாருக்கும் தெரியக் கூடாவண்ணம் அவர்களுக்கு வாய்ப்பூட்டு இட்டிருக்கிறான். எழுதவொட்டாமலும் சமிக்கைகள் கூடச் செய்யவொட்டாமலும், கை விலங்குகள் இட்டிருக்கின்றான். இந்தக் கொடூரச் செய்கைகளால் அதிர்ப்தி இன்னும் மேலிட்டதால் ஈட்டி முனையில் ராஜபக்தி (டுழலயடவல) ஸலாம் வாங்குகிறான். இதென்ன ராஜபக்தி!"  2
என்பதாகப் பாரதியின் விளக்கம் அமைகிறது.

                இத்தன்மையை அடியொற்றிச் சுமார் பன்னிரண்டு படங்களில் பாரதி ஆங்கிலேயர் எதிர்ப்புணர்வை வெவ்வேறு உருவகங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.

                ) மிதவாதிகள் எதிர்ப்புப் படங்கள்
                               
பாரதி, ஏறக்குறைய ஆங்கிலேயரிடம் காட்டிய எதிர்ப்புணர்வை இந்திய தேசியக்காங்கிரஸ் மிதவாதிகளிடமும் காட்டியுள்ளார். இவரின் பல படங்கள் மிதவாதிகளை நாய்களாகவும் ஆந்தைகளாகவும் சித்தரிக்கின்றன. மிதவாதிகளை ஆங்கிலேயரின் கைப்பாவைகனாகச் சித்தரிக்கும் தன்மை பாரதியின் கருத்துப்படங்களில் காணமுடிகின்றது. நவ.7. 1908 -இல் வெளியான இதழில் உள்ள கருத்துப்படம் மிதவாதிகளை நாட்டிற்குக் காவலாக இருக்கிறோம் என்று நடிக்கும் நாய்களாகச் சித்தரிக்கின்றது. அவர்கள் ஆங்கிலேயர் வீசியெறியும் பட்டம், பதவி ஆகிய எலும்புத் துண்டிற்குக் காத்திருக்கின்றனர். சுயாதீனக் கட்சிக்குத் தலைவரான திலகர் என்ற சிங்கத்தை நாடுகடத்த சிறைபிடித்துள்ளதாக அப்படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
               
இவ்வாறு மிதவாதிகளை இந்திய விடுதலைக்குத் தடைகளாகவும் விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களாகவும் மற்றும் பல நிலைகளிலும் எதிர்த்துச் சுமார் பத்துப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

                ) உலக அரசியல் நிகழ்வுப் படங்கள்
                               
பாரதி இந்திய விடுதலை, இந்திய அரசியல் என்ற நிலையோடு நின்று விடாமல் உலக அரசியலையும் உன்னிப்பாகக் கவனித்தவர். அதன் வெளிப்பாடாக இக்கால கட்டத்தில்3 வரையப்பட்ட இரண்டு கருத்துப்படங்கள் உலக அரசியலை விவரிக்கின்றன.

                மார்ச்.23. 1907 இதழில் அமெரிக்கா, ஜப்பான் உறவு நிலை குறித்து ஒரு கருத்துப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அது ரெவ்யூ ஆப் ரெவ்யூஸ் பத்திரிக்கையில் வெளியான படத்தின் மறுவெளியீடாகும். இப்படம், அமெரிக்கா தன்னை மதிப்பவரை அலட்சியம் செய்யும், தன்னை அலட்சியம் செய்பவரை அதிகம் மதிக்கும் என்னும் பொருள் பட வரையப்பட்டுள்ளது.

                மற்றொரு உலக நிகழ்வைப் பற்றிய படம் நவ.14. 1908 - இல் வெளியானது. இதில் ஐரோப்பிய நாடுகள் துருக்கியை ஒரு நோயாளி நாடாகவும் என்றென்றும் தம்மை நம்பி இருக்கும் நாடாகவும்   வைத்;துக்கொள்ள விரும்பிய நிலை விளக்கப்பட்டுள்ளது.

                ) பிற அரசியல் நிகழ்வுப் படங்கள்

                                பாரதியாரின் கருத்துப்படங்களில் சுதேசிக் கப்பலை வரவேற்பது, இந்தியாவின் நிலைப்பாடு - அன்றும் இன்றும், மக்களின் செயல் மேல் கோபம் என்ற கருத்துக்களை உள்ளடக்கியதாக இப்படங்கள் அமைந்துள்ளன.

                சான்றாக ஒருபடத்தை இவண் சுட்டமுடியும். அக்.20. 1906 -இல் வெளியான படம், இந்திய மக்கள் நாட்டின் துயர நிலையை உணராது இருப்பது குறித்துக்கவலை தெரிவிக்கிறது. 'இந்தியாவின் குமாரர்கள் ஆனந்தமடைவதைப் பாருங்கள்" என அப்படத்திற்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தில் பாரதமாகிய மாதா (பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது) நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் படுத்தவண்ணம் உள்ளார். அவரைச் சுற்றி இந்திய நாட்டின் புதல்வர்களாகிய இந்து, சீக்கியர், முஸ்லீம் முதலான பல்வேறு மதத்தினரும் குதுகலிப்பதாகப் படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
               
                இதற்கு அவர் எழுதிய சித்திர விளக்கத்தில் மக்கள் விழிப்புணர்வற்று இருப்பதைக் கடிந்துரைக்கிறார். அதே சமயம் அடுத்த தலைமுறையினருக்கு உண்மையான மகிழ்ச்சியை நாம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தியுள்ளார். அவரின் சித்திர விளக்கமாவது,

Is this an Occasion for Jubilation?
இது உங்களுக்குச் சந்தோஷச் சமயமா?

உலகத்தாரெல்லாம் 'இந்திய ஜனங்கள்" என்றால் கைகொட்டி சிரிக்கிறார்களே! நாட்டிலே பஞ்சத்தால் சாகும் ஜனங்களுக்குக் கணக்கில்லையே! 'ஸ்வர்ண பூமி" என்ற பெயர் போய் இப்போது 'பட்டினி நாடு" என்று பெயராகி விட்டதே! பிளேக் நோயும் மற்றும் சரீர துர்ப்பலத்தால் ஏற்படும் ஆயிரக்கணக்கான வியாதிகளும் நாட்டில் ஸஹஜமாய் விட்டனவே! இந்தியன் என்ற வார்த்தைக்கு 'அடிமை' என்று அர்த்தமாய் விட்டதே! பாரத மாதா தனது கீர்த்தியை எல்லாம் இழந்து மஹா துக்கத்துடன் படுத்திருக்கிறாளே! இதுவா நீங்கள் பண்டிகை கொண்டாடுவதற்கு சரியான தருணம்? நீங்கள் மங்கள ஸ்நாநம் செய்வதும், புதிய ஆடைகள் உடுத்துவதும், சங்கீதம் பாடுவதும் செய்ய வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால் அதெல்லாம் செய்யும்பொழுதுகூட நீங்கள் இந்தியாவின் துக்கத்தை மறந்துவிடாதேயுங்கள். அவளது வறுமைக்காகவும், அவளுடைய அடிமை நிலைக்காகவும், அவளுடைய இகழ்ச்சிக்காகவும், சிறிது தலைகவிழ்ந்து வருத்தப்படுங்கள். அவற்றைத் தவிர்த்துவிட்டு நமது சந்ததியாராவது சந்தோஷ பண்டிகைகளை உண்மையான சந்தோஷத்துடன் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை நாம் ஒவ்வொருவரும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறோமென்பதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள் 4

எனப் பாரதி இந்திய மக்களின் நிலைகண்டு மனம் நொந்தமையை இப்பகுதி தெளிவாக்குகிறது.
               
               
2. உத்தி முறை

                                தமிழ் இதழ்களில் முதன் முதலில் கருத்;துப்படங்களை வெளியிட்டவர் பாரதியாவார்5. இப்படங்களை அவர் வரையவில்லை என்றாலும் படங்களை அருகிருந்து தம் கருத்திற்கேற்றவாறு முழுமையும் ஆற்றுப்படுத்தியுள்ளார் என்பதை அறியமுடிகிறது. எனவே படங்கள் வெளிப்படுத்தும் அனைத்துச் சிந்தனைப்போக்கிற்கும் பாரதியே மூல காரணர் ஆவார். இந்நிலையில் கருத்துப்படங்களில் செய்தியைத் தெரிவிக்கப் பயன்படுத்திய உத்திமுறைகள் இங்கு விளக்கப்படுகிறது. இவ்வுத்தி முறைகள் பலவகைப்பட்டதாக இருப்பினும் இங்கு இரண்டு முறைகள் மட்டும் விளக்க எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

                ) உருவங்களை அப்படியே வரைதல்

                                தம் படத்தில் யாரேனும் ஒருவரின் செயலை விளக்க வேண்டுமானால் அவரின் உருவத்தை அப்படியே வரையும் உத்தியைக் கையாளுகின்றார் பாரதி. இதற்குச் சான்றாக நவ.7. 1908 -இல் வெளியான படத்தில் சிங்கமாகத் திலகர் உருவகிக்கப்பட்டிருத்தலும், அதில் சிங்கத்தின் முகத்திற்குப் பதில் திலகரின் முகம் இடம் பெற்றிருப்பதையும் குறிப்பிடமுடியும். மார்லி, மேத்தா, வி.கி. அய்யர் போன்றோரின் உருவங்கள் அடங்கிய படங்களும் இவ்வுத்தியை அடியொற்றியே சித்தரிக்கப்பட்டுள்ளன.

                ) மத அடையாளங்களைப் பயன்படுத்துதல்

                                பாரதியின் கருத்துப்படங்களில் மத அடையாளங்கள் இன்றியமையா இடம் வகிக்கின்றன. செப்.8. 1906 - ஆம் ஆண்டு வெளியான கருத்துப்படம்; ஆங்கிலேயர்  இந்தியாவிலிருந்து ஆண்டொன்றுக்கு 4.5 கோடி ரூபாய் உறிஞ்சுவதை விளக்குகிறது. இப்படத்தின் ஒருபுறம் இந்தியாவும் மறுபுறம் இங்கிலாந்தும் காட்டப்பெற்று இங்கிலாந்திலிருந்து ஒருவன் குழாய் மூலம் செல்வத்தை உறிஞ்சுவதாகப் படம் வரையப்பட்டுள்ளது. இந்தியாவை அடையாளப்படுத்த பல மதத்தினரும் குழுமியிருக்கும் காட்சியமைத்த பாரதி, தூரத்தில் தென்னை மரங்களும் அதனிடையே இரண்டு கோயில் கோபுரங்களையும் காட்டியுள்ளார். அது போலவே இங்கிலாந்தை அடையாளப்படுத்தச் சிலுவையுடன் கூடிய கோயில் (சர்ச்) இடம்பெறுகிறது. இந்தியா என்றால் (பல மதங்கள் இருப்பினும்) இந்து என்றும் இங்கிலாந்து என்றால் கிறித்துவம் என்றும் காட்டும் படியாகப் பாரதியின் மத அடையாள உத்தி அமைந்துள்ளது.
               
மேலும் பல படங்களில் இந்திய மக்கள் என்ற கருத்தை ஏற்படுத்த பல மதத்தினரையும் தம் மத அடையாளங்களோடு காட்டியுள்ளார். இதில் பெரும்பாலும் அய்யர், முகமதியர், கிறித்தவர், பார்ஸி ஆகியோர் இடம் பெறுகின்றனர்.

முடிபுகள்

             பாரதியின் கருத்துப்படங்கள் அக்காலச் சூழலில் நவீனமானதாகவும் அதிக வரவேற்பிற்குரியதாகவும் இருந்துள்ளமையை அறிய முடிகிறது.

             ஆங்கிலேயரைத் தம் படங்களில் எதிர்த்த அளவிற்குப் பாரதி மிதவாதிகளையும் எதிர்த்துள்ளார்.

             பாரதியின் அரசியல் நிலைப்பாடு கருத்துப்படங்களின் வழி கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. செப். 8; 1906 ஆம் ஆண்டு முதல் டிச. 26 1908 - ஆம் ஆண்டு வரையிலான இரண்டாண்டுகளில் ) ஆங்கிலேயரை எதிர்க்கும் படங்கள் - 12,                   ) மிதவாதிகளை எதிர்க்கும் படங்கள் - 10, ) உலக அரசியல் நிகழ்வைச் சுட்டும் படங்கள் - 2, ) பிற அரசியல் நிகழ்வுகளைச் சுட்டும் படங்கள் - 5 எனக் கருத்துப்படங்கள் அமைகின்றன.

             தம்படங்களில் மதஅடையாளக்குறிகளைக் கருத்து வெளிப்பாட்டிற்கான ஒரு உத்திமுறையாகப் பாரதி பயன்படுத்தியுள்ளமை அறியமுடிகிறது.


சான்றெண் விளக்கம்


1. பாரதியின் இந்தியா இதழ்பற்றியும் கருத்துப்படங்கள் பற்றியும் வெளியான நூல்களும் கட்டுரையும்
                நூல்கள்
1.             இறையரசன், . 1995@ இதழாளர் பாரதி@ சென்னை@ என்.சி.பி.எச்.
2.             செல்வராசு, சிலம்பு.நா. 2003@ பாரதி 'இந்தியா"@ சென்னை@ உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
3.             விசுவநாதன். சீனி. 1993@ பாரதியின் பத்திரிக்கை உலகம்@சென்னை வெளியீட்டாளர் சீனி விசுவநாதன்.
4.             வெங்கடாசலபதி. .இரா. 1994@ பாரதியின் கருத்துப்படங்கள்@ விற்பனை உரிமை சென்னை நர்மதா பதிப்பகம்.
கட்டுரை
1.             செங்கமலத்தாயார், 'பாரதியின் கருத்தோவியங்கள்", தேசிய ஒளி(சிறப்பிதழ்) புதுச்சேரி, சூலை 1994.

2. .69, வெங்கடாசலபதி .இரா.,பாரதியின் கருத்துப்படங்கள், நர்மதாபதிப்பகம் சென்னை. 1994

3. இது கட்டுரையின் ஆய்வெல்லையாக எடுத்துக்கொள்ளப்பட்ட காலப்பகுதியைச் சுட்டும். அதாவது செப். 8. 1906 முதல் டிச. 26. 1908 வரையிலான காலகட்டம்.

4. .32. முந்நூல்

5. .52. செல்வராசு. சிலம்பு.நா., பாரதி'இந்தியா", உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2003

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக